சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - போதை இளைஞர்கள் செய்த கொடூரச் செயல்
ஓமலூர் அருகே 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மிட்டாய் தருவதாக கூறி ஏமாற்றி மூன்று போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பானக்காடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 250 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தநிலையில், இந்த பள்ளியில் பள்ளக்காட்டூர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பகுதியில் நடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர். அதேபகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகன்- ராமாயி தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் ஆறு வயதான மூன்றாவது மகள் பனங்காடு அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்தநிலையில், சிறுமி நேற்று மாலை பள்ளி முடிந்து காட்டுப்பாதையில் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள பனஞ்சாரி புதரில் மூன்று இளைஞர்கள் மது அருந்திகொண்டு இருந்துள்ளனர். போதை தலைக்கேறிய மூவரும் அந்த வழியாக வந்த சிறுமியை ரயில்வே தண்டவாளத்தை கடக்க உதவுவதாக கூறி தூக்கி வந்துள்ளனர்.
பின்னர் உனக்கு நிறைய மிட்டாய் கொடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால், குழந்தை மிட்டாய் வேண்டாம் என்றும் வீட்டிற்கு போக வேண்டும் என்றும் அழுதுகொண்டே கூறியுள்ளது. போதை ஆசாமிகள் மூவரும் குழந்தையை விடாமல் மிட்டாய் கொடுப்பதாக கூறி கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வழியால் துடித்த குழந்தையிடம் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் கூறினால் கொலை செய்து விடுவோம் என்றும் கூறி மிட்டாய் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
பின்னர், வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடையில் ரத்தம் இருப்பதை அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தொளசம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர், குழந்தையிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அப்போது குழந்தை பயந்துகொண்டே நடந்தது குறித்து கூறியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த மருத்துவர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தையை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து குழந்தை ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கிராமத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட இடத்தில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் ஆய்வுகள் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.