
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற வேன் பஞ்சராகியுள்ளது.
இதையடுத்து வேன் ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில், வேனில் இருந்தவர்கள் கீழே இறங்கி சாலையில் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது வேகமாக வந்த லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது வேகமாக மோதியுள்ளது.. இதில், சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய வேன், எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 10 பேரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மீரா, தெய்வானை, சேட்டாம்மாள், தேவகி, சாவித்திரி, கலாவதி, என்பதும் ஒருவரது பிரேதம் அடையாளம் தெரியவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.