வேடிக்கை பார்த்த நபர் உட்பட ஜல்லிக்கட்டில் பரிதாப மரணமடைந்த 7 பேர்!
தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருது விடும் விழாக்களில் காளை முட்டியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
பொங்கல் விழாவை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டியில் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற, அதனை வேடிக்கை பார்த்த 70 வயதான பெருமாள் என்பவர் மீது காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர், புதுக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடந்த எருதாட்டத்தை வேடிக்கை பார்த்த வேடியப்பன் எனும் இளைஞர், காளை முட்டியதில் உயிரிழந்தார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரட்சாண்டர் திருமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகளை வழங்கினார்.
போட்டியைக் காண சென்ற குழந்தை வேலு என்பவர், காளை தாக்கியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், சிவகங்கை மாவட்டம் சிறாவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டியிலும் காளை முட்டியதில் சுப்பையா என்பவர் மரணமடைந்தார்.