கோவை : ஜூனியரை ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்கள் சிறையில் அடைப்பு!
கோவை அவிநாசி சாலை பீளமேடு பகுதியில் பிஎஸ்ஜி தொழிநுட்பக் கல்லூரி இயங்கி வருகிறது. திருப்பூரை சேர்ந்த மாணவர் ஒருவர் இக்கல்லூரி விடுதியில் தங்கி படித்துவந்துள்ளார். மது வாங்குவதற்காக இவரிடம் ராகிங் செய்து பணம் கேட்டு இவரின் சீனியர்கள் 7 பேர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க இயலாது என்று மறுத்துள்ளார் ஜூனியர். இதனால் கோபமடைந்த சீனியர் மாணவர்கள் 7 பேர், இவரை தாக்கி இவரின் தலையை மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். மேலும் அவரை நிர்வாணப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அம்மாணவர் இச்சம்பவம் குறித்து தன் பெற்றோர்களிடத்தில் தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் அருகில் இருந்த பீளமேடு காவல் நிலையத்திற்கு சென்று இதுதொடர்பாக உரியமுறையில் புகார் அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், அங்கு நடந்த ராகிங் சம்பவத்தின் பின்புலத்தகவல்களை விசாரணை மூலம் செய்து உறுதி செய்துள்ளனர். தொடர்ந்து சீனியர் மாணவர்கள் 7 பேரை போலீசார் கைது செய்தனர். கல்லூரி நிர்வாகமும் அவர்களை இடைநீக்கம் செய்தது.
7 மாணவர்களின் மீதும் சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், ராகிங் தடுப்பு சட்ட பிரிவு போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் நீதிமன்ற காவலின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 22 வரை சிறை தண்டனை தொடருமென தெரிகிறது.