\
திருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்

திருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்

திருச்சி நகைக்கொள்ளை வழக்கு - சுரேஷுக்கு 7 நாள் போலீஸ் காவல்
Published on

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரண் அடைந்த சுரேஷை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கடந்த 2-ஆம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரி சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. பிரபல வங்கிக் கொள்ளையன் திருவாரூர் முருகன் லலிதா ஜுவல்லரியில் கைவரிசை காட்டியது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிய காவல்துறையினர் மணிகண்டன் என்பவரை அக்டோபர் 3-ஆம் தேதி கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மணிகண்டனோடு இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ் தப்பியோடிவிட்டார். இவர் திருவாரூர் முருகனின் சகோதரி கனகவல்லியின் மகன் ஆவார். இதனையடுத்து கனகவல்லியை கைது செய்த‌ காவல்துறையினர் சுரேஷை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து  செங்கம் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். அதேபோல, திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் கொள்ளையர்களுக்கு திட்டம் வகுத்து தந்த முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதைத்தொடர்ந்து சுரேஷை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தருமாறு நீதிமன்றத்தில் தனிப்படை போலீசார் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதி 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். மேலும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுரேஷ் அவரது வழக்கறிஞரை சந்திக்கலாம் எனவும் தெரிவித்தார். இதனிடையே போலீஸ் தன்னை அடித்து துன்புறுத்துவார்கள் எனவும் தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் சுரேஷ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதெல்லாம் போலீஸ் அடிக்கமாட்டார்கள் எனவும் கண்ணியமாக நடத்துவார்கள் எனவும் நீதிபதி தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com