
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கருமாங்குளம் அருகே அசாம் மாநில இளைஞர்கள் 11 பேர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்து செங்கம் கருமாங்குளம் அருகே கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், காரில் பயணம் செய்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயம் அடைந்த மேலும் 6 இளைஞர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 இளைஞர்களை மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி, இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் அதன் அருகில் அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.