
தமிழ்நாட்டில் 2021-22 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் 6718 பேர் வறுமை, குடும்ப சூழல், நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் சேர ஆர்வமின்மை, தொழில் செய்தல், அருகாமையில் கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் சேரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில், 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் இந்தாண்டு 2022-23 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி படிக்காமல் இருந்தால், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர் மாணவர்கள் கூட்டம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் 79,762 மாணவர்கள் கலந்துக் கொண்டு உயர்கல்வி ஆலோசனை பெற்றனர். அவர்களில் 8249 பேர் இந்தாண்டு உயர்கல்வி தொடராதது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டதில் 1531 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறை, உயர் படிப்பில் ஆர்வமின்மை, பணியில் சேர்ந்தது, பெற்றோர் படிக்க அனுமதிக்காதது, தேர்வு எழுதாமை, தொழில் செய்வது, கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர்க்கை கிடைக்காதது, அருகாமையில் கல்லூரி இல்லாதது முதலிய காரணங்களால் உயர்கல்வி சேராமல் 6718 மாணவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 4007 மாணவர்களை செல்போன் எண் மூலம் தொடர்புக் கொள்ள முடியவில்லை.
மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ள பிறத்துறையினருடன் இணைந்து 2711 பேருக்கு உயர்கல்வி படிக்க நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறும் முகாமில் மாணவர்கள் கலந்துக் கொள்ள வேண்டும். நிதி பற்றாக்குறை, குடும்பச்சூழல் மற்றும் பிற நிதி சார்ந்த காரணங்களால் உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித்தொகை, வங்கி ஸ்பான்சர், வங்கி கடன், சிஎஸ்ஆர் நிதி, கல்வி அறக்கட்டளை மூலம் நிதி பெற்று உயர்கல்வி படிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் திறன் வளர்ப்புக்கான பயிற்சிகளை அளிக்க நடவடிக்கை எடுக்கலாம். கலை மற்றும் அறிவியியல் கல்லூரி. தொழிற்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவந்ததால், அந்தத்துறையினர் கல்லூரியில் காலியாக உள்ள இடத்தில் மாணவர் சேர்க்கையை அங்கேயே நடத்தலாம். மேலும் தொடர்புக் கொள்ள இயலாத மீதமுள்ள 4007 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் முகாம் நடைபெறும் 3 நாட்களுக்கு முன்னர் செல்போன் மூலமோ, நேரிலோ தொடர்பு கொண்டு முகாமில் கலந்துக் கொள்ள செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.