TNPSC குரூப்-4 தேர்வு : 6,574 காலிப்பணியிடங்களான அறிவிப்பாணை வெளியீடு.. தேர்வு எப்போது?
அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பல லட்சம் தமிழக இளைஞர்கள் ஆண்டு தோறும் குரூப் தேர்வுகளை எழுதி வருகின்றனர். அதில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக TNPSC சார்பில் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குரூப் 4 தேர்வுக்கு, தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிப்பார்கள் என்பதால் அதிக கவனம் பெறும் தேர்வாகவும் இது இருக்கிறது.
இந்தச்சூழலில் தான், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கை வெளியான இன்று முதல் நவம்பர் 11-ம் தேதி வரை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்வு 2027-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது.
அதேசமயம், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6,574 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருப்பது தேர்வர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 3,935 பணியிடங்களுடன் குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 5,307 ஆக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

