மின்கம்பி அறுந்து 5 மாதங்களில் 63 விபத்துகள்: ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

மின்கம்பி அறுந்து 5 மாதங்களில் 63 விபத்துகள்: ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு
மின்கம்பி அறுந்து 5 மாதங்களில் 63 விபத்துகள்: ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் 5 மாதங்களில் மின்கம்பி அறுந்து 63 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. இதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அண்மை காலமாக புதிதாக நியமிக்கப்பட்ட கேங்மேன் பணியாளர்கள், களப் பணியாளர்கள் மின் விபத்தில் சிக்குவது அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும், சரியான முறையில் பயிற்சி அளிக்கப்படாததும் விபத்து அதிகரிப்பதற்கு காரணம் என தெரிவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுவதால் ஏற்படும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதோடு, இதைத் தடுக்க பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர் ஒவ்வொரு மின் விபத்தையும் தெளிவாக ஆராய வேண்டும் என்றும், பாதுகாப்புப் பிரிவின் உதவி செயற்பொறியாளர், மின் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, மீண்டும் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்காமல் மின் விபத்து நிகழ்ந்தால், களப் பொறியாளர் மற்றும் களப் பணியாளரே பொறுப்பு எனவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பணிகளுக்கு முன் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் போது, மின் விநியோகம் தடை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களில், 9 மண்டலங்களில் 63 மின் விபத்து சம்பவங்கள், மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக நிகழ்ந்துள்ளது. இதில், மனிதர்கள், மிருகங்கள் என 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் ஏற்பட்ட மின் விபத்துக்களை மின்னியல் பிரிவில் செயற்பொறியாளர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரி நேரடியாக விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து, தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை அடங்கிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மின்வாரியம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com