செல்போன் பேசிக்கொண்டு பைக் ரைடு : 7 மாதத்தில் 63 ஆயிரம் லைசன்ஸ் ரத்து
தமிழகத்தில் 7 மாதங்களில், வாகனத்தில் செல்போன் பேசி கொண்டே சென்ற 64 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
சாலை விபத்துகளால் உயிர் சேதம் ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி செல்வது, ஹெல்மட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது, செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டுவது, அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவது போன்ற குற்றங்களால் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், உயிரிழப்பை தடுக்கவும் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 19 ஆயிரத்து 422 பேரின் ஓட்டுநர் உரிமமும், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி சென்றதற்காக 29 ஆயிரத்து 964 பேரின் ஓட்டுநர் உரிமமும், சிக்னல்களை மதிக்காமல் சென்ற 18 ஆயிரத்து 287 பேரின் உரிமத்தையும் போக்குவரத்து காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர். இதுதவிர கடந்த 7 மாதங்களில் செல்போன் பேசியபடி வாகனங்களை ஓட்டிச்சென்ற 64 ஆயிரத்து 105 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.