60 சவரன் நகை கொள்ளை: கொள்ளையனைப் பிடிக்க திணறும் போலீஸ்

60 சவரன் நகை கொள்ளை: கொள்ளையனைப் பிடிக்க திணறும் போலீஸ்
60 சவரன் நகை கொள்ளை: கொள்ளையனைப் பிடிக்க திணறும் போலீஸ்

சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில் 60 சவரன் நகையை கொள்ளையடித்த கொள்ளையனைப் பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

வங்கி அலுவலர் வீட்டில் இரு மாதங்களுக்கு முன் 60 சவரன் நகை, வைர மோதிரங்கள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. கொள்ளையன் குறித்து சிசிடிவி காமிரா மூலம் கண்டுபிடித்த காவல்துறையினர், இதுவரை அவனைப் பிடிக்க முடியாமல் திணறுகின்றனர். ஏற்கனவே ஒருமுறை பிடிக்க முயன்றும், காவல்துறையினரிடம் இருந்து கொள்ளையன் தப்பியோடிவிட்டான். நகைகளை இழந்த வங்கி அலுவலர், அடிக்கடி காவல் ஆணையர் அலுவலத்தில் சென்று இதுதொடர்பாக முறையிட்டு வருகிறார்.

சென்னை மடிப்பாக்கம் ராம்நகர் 8-வது தெருவை சார்ந்தவர் முத்து. இவர் அரசு வங்கியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முத்துவும் அவரது மகளும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் வீட்டிலிருந்த முத்துவின் மனைவி கலாவதி அருகில் இருந்த உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். மாலை மூவரும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 60 சவரன் தங்க நகை, வைர மோதிரங்கள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், செய்தியாளர்களுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவிக்க கூடாது என்று போலீசார் கூறியதாக தெரிகிறது. கொள்ளை சம்வத்தை குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார் அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் பக்கத்து தெருவில் கொள்ளையன் ஒருவன் வீடுகளை உளவு பார்ப்பதும் அவனுக்கு உதவியாக இருவர் அப்பகுதியில் சுற்றி வருவதும் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமராவில் கொள்ளையன் வீட்டிற்குள் நுழைவதும் கொள்ளையடித்து வெளியே வருவதும் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொள்ளையன் சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. போலீசார் கொள்ளையனை சுற்றிவளைத்தபோது போலீசார் மீது இரண்டு சக்கர வாகனத்தை மோதிவிட்டு கொள்ளையன் போலீஸ் பிடியிலிருந்து லாவகமாக தப்பி ஓடி சென்றுள்ளார். கொள்ளையனிடமிருந்து இரண்டு சக்கர வகானத்தை மட்டுமே போலீசாரால் பறிமுதல் செய்ய முடிந்தது. கொள்ளையன் யார் என்ற அடையாளம் போலீசாருக்கு தெரிந்தும் கடந்த இரண்டு மாதங்களாக கொள்ளையனை பிடிக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். நகைகளை பறிகொடுத்த குடும்பத்தினர் வாரம்தோரும் மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கும் சென்று வருவதாகவும் ஆனால் குற்றவாளியை இதுவரை பிடிக்க முடியாததால் மிகுந்த வேதனையில் உள்ளதாகவும் தங்கள் மகளுக்காக வைத்திருந்த நகைகள் கொள்ளை போனது தங்கள் குடும்ப சூழலை மாற்றி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இதே ராம்நகர் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 இடங்களில் கொள்ளை போனது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com