சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போன சிறுவன்... 14 நாட்கள் கழித்து ஆந்திராவில் மீட்பு!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சசிதா பேகம் என்பவருக்கு ஆறு வயதில் சகிப் உதீன் மற்றும் மூன்று வயதில் சசிதுல் இஸ்லாம் என இரண்டு மகன்கள் உள்ளனர். சசிதா பேகம், கடந்த 12-ம் தேதி காய்கறி கடையில் பணிபுரிவதற்காக தனது இரு மகன்களுடன் ரயிலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அப்போது சசிதா பேகம் கடை உரிமையாளரை சந்திக்க சென்ற நேரத்தில் அவரது ஆறு வயது மகன் சகிப் உதீன் காணாமல் போயுள்ளார். பதறிப்போன சசிதா பேகம் தனது மகனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல இடங்களில் தேடியுள்ளார். மகன் கிடைக்காததால் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுவன் இரண்டு இளைஞர்களுடன் இருந்துவிட்டு, அதன் பின் சில பெண்களுடன் செல்வது தெரிய வந்தது.
மொழி புரியாத காரணத்தால் சசிதா பேகம் வாய்மொழி புகாரை அளித்து விட்டு தனது மகனை சென்னையில் பல இடங்களில் தேடி அலைந்தபோதும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையே கடந்த 14 நாட்களாக சென்ட்ரல் ரயில்வே போலீசார் சிறுவனை தீவிரமாக தேடிய நிலையில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதன்பேரில் நேற்று (ஜன 26) அங்கு சென்று சிறுவனை மீட்டுள்ளனர்.
மேலும், சிறுவனை கடத்திச் சென்ற மூன்று ஆந்திர பெண்களையும் போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்திய போது இவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சரஸ்வதி, அஞ்சம்மா, சக்ஷிதா ஆகிய மூவர் என்பது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு ரயில் மூலமாக வந்து ரயில் நிலையங்களில் யாசகம் எடுக்கும் கும்பல் என்பதும் வியாசர்பாடியில் காலி மைதானத்தில் டெண்ட் அடித்து தங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த 12 ஆம் தேதி இரவு சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றி கொண்டிருந்தபோது, சரஸ்வதி என்பவருக்கு குழந்தை இல்லாததால் அந்த சிறுவனிடம் “உன் தாயை நாங்கள்தான் வேலைக்கு அழைத்துச் சென்றோம். உன்னை அழைத்து வர கூறினார்” எனக்கூறி அழைத்துக் கொண்டு 13-ஆம் தேதி அதிகாலை லோக்கல் ட்ரெயினில் வியாசர்பாடி சென்றதும் தெரியவந்துள்ளது. பின் கடத்தப்பட்ட சிறுவனை 14ஆம் தேதி ரயில் மூலமாக ஆந்திரா அழைத்துச் சென்று அங்கே வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
ரயிலில் உள்ளே இருந்த சிசிடிவி காட்சிகளை சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீசார் ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும், அந்த தனிப்படை காவல்துறையினர் ஆந்திராவுக்கு சென்று சிறுவனை மீட்டு மூன்று பேரை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த கும்பல் சிறுவர்களை கடத்திச் சென்று அவர்களை யாசகம் எடுக்க வைத்துக் கொண்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சில கடத்தல் பெண்கள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களையும் தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட சிறுவனையும் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் சென்ட்ரல் ரயில்வே தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஜன 27) மீட்கப்பட்ட சிறுவனை அவரது தாயார் சசிதா பேகமிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் சென்ட்ரல் தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.