ஆணவக் கொலை செய்யப்பட்டாரா இசக்கி சங்கர்?  - போலீஸார் சந்தேகம்

ஆணவக் கொலை செய்யப்பட்டாரா இசக்கி சங்கர்? - போலீஸார் சந்தேகம்

ஆணவக் கொலை செய்யப்பட்டாரா இசக்கி சங்கர்? - போலீஸார் சந்தேகம்
Published on

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள வெள்ளாங்குளி முத்தாரம்மன் தெருவை சேர்ந்த சுடலைமுத்து மணி என்பவருடைய மகன் இசக்கி சங்கர்.   33 வயதான இசக்கி சங்கருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 20 ம் தேதி காலை வழக்கம்போல் ஊர்க்காடு அருகே இருக்கும் தாமிரபரணி ஆற்றுப் பகுதிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்களால் சரமாரியாக இசக்கி சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வந்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த சத்யபாமா என்ற பெண்ணை இசக்கி சங்கர் காதலித்து வந்ததாகவும், இருவரின் திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.  இந்தச் சூழலில் இசக்கி சங்கர் கொல்லப்பட்டிருப்பது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே இது தொடர்பாக வெள்ளாங்குளியைச் சேர்ந்த சத்யபாமாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் அந்தப் பெண் 21ஆம் தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனையடுத்து இவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தப் பெண்ணின் சகோதரர் உள்பட 6 பள்ளி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இசக்கி சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள மேலும் ஒரு சிறுவனைத் தேடி வருகின்றனர். கடந்த இரு தினங்களாக இந்த விசாரணை தொடர்ந்து இரு தரப்பினரிடமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com