காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கழிவு நீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கி வீட்டு உரிமையாளர், அவரது மகன்கள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெமிலியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர்த் தொட்டியை தொழிலாளர்கள் சுத்தம் செய்து விட்டு சென்றிருக்கின்றனர். தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, கழிவுநீர்த் தொட்டி சரியாக சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்க, தொட்டியின் மூடியைத் திறந்தபோது விஷவாயு தாக்கி மயங்கி தொட்டிக்குள் விழுந்திருக்கிறார்.
தந்தை விழுந்ததைக் கண்ட மகன்கள் கண்ணன் மற்றும் கார்த்திக்கும் காப்பாற்றச் சென்றபோது அவர்களையும் விஷவாயு தாக்கியதால், மயங்கி தொட்டிக்குள் விழுந்திருக்கின்றனர். இந்நிலையில், அருகிலிருந்த மளிகைக் கடையில் பொருட்கள் வாங்க வந்த ரமேஷ், லஷ்மிகாந்தன் மற்றும் ஒரிசாவைச் சேர்ந்த சுரதா டிஸ்ஸி ஆகிய மூவரும் இதைக் கண்டு, காப்பாற்ற முயன்ற நிலையில், அவர்களும் மயங்கி தொட்டிக்குள் விழுந்திருக்கின்றனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், உயிரிழந்த நிலையில், 6 பேரின் உடல்களை மீட்டு, ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.