சேலம்: சொகுசு பேருந்தில் பயங்கரமாக மோதிய ஆம்னி கார்... சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக பலி

சேலம்: சொகுசு பேருந்தில் பயங்கரமாக மோதிய ஆம்னி கார்... சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக பலி
சேலம்: சொகுசு பேருந்தில் பயங்கரமாக மோதிய ஆம்னி கார்... சிறுமி உட்பட 6 பேர் பரிதாபமாக பலி

ஆத்தூர் அருகே சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். துக்க நிகழ்வுக்கு சென்ற போது விபத்து நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் கிரைன் பஜார் பகுதியை சேர்ந்த ஆட்டோ மெக்கானிக்கான ஆறுமுகம் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். இவருடைய 30 வது நாள் காரியத்திற்காக உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற காரை ராஜேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கார் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓட்டம்பாறை மேம்பாலம் பகுதியில் வலது புறத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஈரோட்டில் இருந்து சென்னை நோக்கி சென்ற சொகுசுப் பேருந்தொன்று, ஆம்னி கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நிகழ்விடத்திலேயே காரை ஓட்டிய ராஜேஷ் (29), காரில் பயணித்த சந்தியா (20), சரண்யா (26), ரம்யா (25), சுகன்யா (28) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் போலீசார் காரில் இறந்தவர்களை மீட்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து படுகாயம் அடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடலும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படுகாயம் அடைந்த பொன்னுசாமி, கிருஷ்ணவேணி, சுதா, புவனேஸ்வரன், உதயகுமார், 11 வயது சிறுமி தன்ஷிகா மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சிறுமி தன்ஷிகா சேலம் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.

இது குறித்த தகவல் அறிந்து வந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா மற்றும் ஆத்தூர் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துக்க நிகழ்வுக்காக சென்றவர்கள் விபத்தில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com