லாரி - ஷேர் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
உசிலம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். பள்ளி மாணவிகள் உள்பட 3 காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் உசிலம்பட்டியிலிருந்து பாறைப்பட்டி நோக்கி சென்ற லாரியும், ஜோதில் நாயக்கனூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த காவல்த்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் உயிரிழந்த ஆறு பேரில் கோடாங்கி நாயக்கன்பட்டி அசோக், ஜோதிநாயக்கனூர் முத்துலெட்சுமி, வாசியம்மாள், தாடையம்பட்டி சத்யா மற்றும் கீழப்புதூரைச் சேர்ந்த குருவம்மாள் என ஐந்து பேரின் அடையாளங்களை கண்டறிந்துள்ளனர். மேலும் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது உசிலம்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.