வைகையில் வீசப்பட்ட 6 மாத குழந்தை : பரிதாப நிலையில் உடல் மீட்பு!
மதுரையில் உள்ள வைகையாற்றுக்குள் வீசப்பட்ட 6 மாத ஆண் குழந்தை, ஈக்கள், எறும்புகள் மொய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
மதுரையில் உள்ள வைகையாற்றில் 6 மாத ஆண் குழந்தையை யாரோ தம்பதியினர் வீசி சென்றுள்ளனர். அந்தக் குழந்தை அங்கேயே கிடந்து, பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் வைகையாற்றில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள், அந்தக் குழந்தையின் சடலத்தை கண்டு பிறரிடம் கூறியுள்ளனர். குழந்தை உடலை சென்று பார்த்தபோது ஈக்கள், எறும்புகள் மொய்த்து பார்ப்பவரை பதறவைக்கும் நிலையில் இருந்துள்ளது.
இதையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அத்துடன் இதுதொடர்பாக அந்தப் பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் மரணம் குறித்து கூறிய அப்பகுதியினர், நெஞ்சில் ஈரம் இல்லாதவர்களே குழந்தையை வீசி சென்று உள்ளதாக கவலை தெரிவித்தனர்.