சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக 6 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். புதிய நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. புதிய நீதிபதிகளின் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.
நீதிபதியாக பதவியேற்றுள்ள பவானி சுப்பராயன், 2006ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள், பழங்குடியினர் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளை கையாண்ட அனுபவம் மிக்கவர். மூன்றாம் பாலினத்தை சேர்ந்த பிரித்திகா யாசினிக்கு, காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு நடைமுறைகளில் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போது, அவரது சட்டப்போரட்டங்களுக்கு உறுதுணையாக நின்றவர்.
நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை பூர்வீகமாக கொண்டவர். 27 ஆண்டு கால வழக்கறிஞர் பணியில் தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞராகவும், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். கட்டப் பஞ்சாயத்தை ஒடுக்குவதற்காக இவர் அளித்த பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது
நீதிபதி சுவாமிநாதன், மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்து வந்தவர். எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' புத்தகப் பிரச்னையில் அரசு அமைத்த பேச்சுவார்த்தைக்குழுவில் இடம்பெற்றவர். நடிகர் தனுஷ் தங்களது மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கில் தனுஷ் தரப்பில் ஆஜரானவர்.
தேனி மாவட்டம், கம்பத்தை பூர்வீகமாக கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ் அவரது குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை வழக்கறிஞர். சிவில் மற்றும் சமரச தீர்வுக்கான வழக்குகளிலும், உற்பத்தி, வங்கி, வணிகம் மற்றும் வங்கியல்லாத நிதி சார்ந்த உள்நாடு, வெளிநாடு நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளிலும் ஆஜராகி உள்ளார். இவரது தந்தை ஏ.அப்துல் ஹாதி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். அப்துல் குத்தூஸின் தாத்தா எஸ்.கே.அஹமத் மீரான் சுதந்திர போராட்ட தியாகியாவார்.
நீதிபதி தண்டபாணி, விழுப்புரம் மாவட்டம் சின்ன சேலத்தில் எண்ணெய் வியாபாரியின் மகனாக பிறந்து திருச்சியில் சட்டக்கல்வியை முடித்தவர். 2000 ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட இவர், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார். பின்னர் 2006ல் மத்திய அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு அமலாக்கத்துறை வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
நீதிபதி பி.டி.ஆதிகேசவலு 23ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்காகவும் ஸ்டேட் வங்கி, இந்திய உணவுக் கழகம், தமிழ்நாடு முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு ஆகியவற்றின் வழக்கறிஞராகவும்
பணியாற்றியுள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். இவரது தாத்தா பி.எம்.ஆதிகேசவலு நாயக்கர் மெட்ராஸ் மாகாணத்தின் உறுப்பினராகவும், மெட்ராஸ் துணை மேயராகவும் இருந்தவர்.