Kanyakumari
Kanyakumari web

நட்சத்திர தொகுதி| திராவிடக் கட்சி OR தேசிய கட்சி? குமரியில் கொடி நாட்டப்போவது யார்?

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இன்றைய தொகுதி அலசலில் கன்னியாகுமரி தொகுதி குறித்து பார்க்கலாம்...
Published on
Summary

கன்னியாகுமரி மாவட்டம், 6 சட்டமன்றத் தொகுதிகளுடன், திராவிடக் கொள்கைகளும் தேசியவாதமும் மோதும் முக்கிய அரசியல் களமாக உள்ளது. கிறிஸ்தவ நாடார், இந்து நாடார் மற்றும் மீனவ சமூக வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கின்றன. கூட்டணி பலம் மற்றும் சமூக காரணிகள் இம்முறை தேர்தல் முடிவை தீர்மானிக்க உள்ளன.

தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரி, இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலம் என்பதைத் தாண்டி, அரசியல்ரீதியாக 'ஹை- வோல்டேஜ்' களமாக உருவெடுத்துள்ளது. 6 சட்டமன்றத் தொகுதிகளைக்கொண்ட இம்மாவட்டம், திராவிடக் கொள்கைகளும் தேசியவாதமும் நேருக்கு நேர் மோதும் களமாக உள்ளது.

Keeriparai, Kanyakumari
Keeriparai, Kanyakumari web

கன்னியாகுமரி தொகுதி: மாவட்டத்தின் நுழைவாயிலான கன்னியாகுமரி தொகுதியில் தற்போது அதிமுகவின் என். தளவாய் சுந்தரம் எம். எல்.ஏ-வாக உள்ளார். இதுவரை அதிமுக 7 முறையும், திமுக 5 முறையும் வென்றுள்ள இத்தொகுதியில், கிறிஸ்தவ நாடார், இந்து நாடார் மற்றும் மீனவச் சமூகத்தினரின் வாக்குகளே வெற்றியின் 'மாஸ்டர் கீ.

நாகர்கோவில் தொகுதி: மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலில், பாஜகவின் மூத்த தலைவர் எம்.ஆர். காந்தி தற்போதைய எம்.எல்.ஏ.. நாடார், பிள்ளை மற்றும் நகர்ப்புற சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் கொண்ட இங்கு, மாநகராட்சி அந்தஸ்துக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு மேம்பாடே பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.

குளச்சல் தொகுதி: டச்சுப் படையை வென்ற வரலாற்றுப் பின்னணி கொண்ட குளச்சல் இப்போது காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்கிறது. ஜே.ஜி. பிரின்ஸ் தொடர்ந்து 3 முறை வென்று அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். மீனவ மற்றும் நாடார் சமூகத்தினர் இங்கு வெற்றியைத் தீர்மானிக்கின்றனர்.

Colachel fishing harbour in Kanniyakumari
Colachel fishing harbour in Kanniyakumariweb

பத்பநாபபுரம் தொகுதி: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரான பத்மநாபபுரத்தில், திமுக தொடர்ந்து 4 முறை வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. தற்போதைய அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் உள்ள இத்தொகுதியில், ரப்பர் விவசாயிகளின் பிரச்சினைகளும் நாடார்/நாயர் சமூக வாக்குகளும் முக்கியக் காரணிகளாக உள்ளன.

விளவங்கோடு தொகுதி: விளவங்கோடு தொகுதி, காங்கிரஸ் 8 முறையும், கம்யூனிஸ்ட்கள் 5 முறையும் வென்ற பூமி. சமீபத்திய இடைத்தேர்தலில் வென்ற தாரகை கட்பர்ட் மூலம் தனது பிடியை காங்கிரஸ் தக்கவைத்துள்ளது.

Padmanabapuram Palace , Kanyakumari
Padmanabapuram Palace , Kanyakumari web

கிள்ளியூர் தொகுதி: கிள்ளியூர் காங்கிரஸின் மற்றொரு பலமான தளம். தற்போதைய எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ் குமார். தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுக விவகாரங்கள் இங்கு தேர்தல் களத்தைச் சூடாக்குகின்றன.

6 தொகுதிகளிலும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்த முறை கூட்டணி பலம் மற்றும் சமுதாயக் காரணிகளே இறுதித் தீர்ப்பை எழுதப்போகின்றன. முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் வெற்றிக்கொடி நாட்டப்போவது திராவிடக் கட்சிகளா, தேசியக் கட்சிகளா? மேலும் விஜய்யின் தவெக என்ன தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பதையும் சில வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com