சிறைவாசம் என்னை நானே ஆய்வு செய்து கொள்ள எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 52 நாட்களாக புழல் சிறையிலிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக அரசு பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் செங்கோட்டையன் மேற்கொண்டுவரும் செயல்பாடுகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதாக வைகோ கூறினார்.
52 நாட்கள் சிறைவாசம் என்னை நானே ஆய்வு செய்துகொள்ளவும், புத்தகங்கள் படிக்கவும் நல்ல வாய்ப்பாக பயன்பட்டது என அவர் தெரிவித்தார். தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் நடத்தும் போராட்டத்திற்கு வைகோ ஆதரவு தெரிவித்தார். மதுக்கடைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியை அடக்க நினைக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.