16 இருசக்கர வாகனங்கள் எரிப்பு: ‘பழிவாங்குவதற்காக அப்படி செய்தேன்’-அதிர்ச்சி வாக்குமூலம் அளித்த நபர்!

மதுரவாயல் அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 16 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன்,
கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன், PT

சென்னை மதுரவாயல் வி.ஜி.பி. அமுதம் நகர் பகுதியில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலைக் குடிசை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த ஓலைக் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தால், 16 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானதாக கோயம்பேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தீ விபத்திற்கு காரணம் மின் கசிவா அல்லது நாசவேலை காரணமா என்ற கோணத்தில் கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மதுரவாயல் வாகனங்கள் எரியும் சிசிடிவி காட்சி
மதுரவாயல் வாகனங்கள் எரியும் சிசிடிவி காட்சிPT

பின்னர், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த ஓலை குடிசையின் மேலிருந்த ஓலை மற்றும் வைக்கோலை எடுத்து ஒரு இருசக்கர வாகனத்தின் மீது தீ வைத்து விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.

இதனையடுத்து அதேப் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (51) என்பவரை கைதுசெய்து விசாரித்தப்போது, திடுக்கிடும் தகவல் வெளியானது. அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று மதுபோதையில் அதே பகுதியில் அவர் படுத்து இருந்ததாகத் தெரிகிறது. அப்போது தன் செல்ஃபோன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றதாக கூறிய அவர், அதே பகுதியில் சுற்றும் சிறுவர்கள் எடுத்திருக்கலாம் என்று சந்தேகித்து அதுபற்றி அங்கிருந்தவர்களிடம் கேட்டபோது அவர்கள் தன்னை அவதூறாகப் பேசியதாக தெரிவித்துள்ளார்.

மதுரவாயல் வாகனங்கள் எரிந்து கிடக்கும் காட்சி
மதுரவாயல் வாகனங்கள் எரிந்து கிடக்கும் காட்சிPT

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளால் ஆத்திரமடைந்த அந்த நபர் தன்னை திட்டியவர்களில் அருள் என்பவரின் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிக்க முடிவு செய்துள்ளார். அதற்காக சம்பவத்தன்று அங்கிருந்த ஓலை மற்றும் வைக்கோலை வைத்து பழிவாங்கலாம் என நினைத்து, அருளின் இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்திருக்கிறார். ஆனால் அது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஓலைக் குடிசை மற்றும் மற்ற இரு சக்கர வாகனங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் அங்கிருந்து அவர் தப்பி சென்றது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராமச்சந்திரனை கோயம்பேடு போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com