``அரசு மருத்துவமனையால் மறுபடி பிறந்திருக்கேன்”-இதயமாற்று அறுவைசிகிச்சை செய்தவர் நெகிழ்ச்சி

``அரசு மருத்துவமனையால் மறுபடி பிறந்திருக்கேன்”-இதயமாற்று அறுவைசிகிச்சை செய்தவர் நெகிழ்ச்சி
``அரசு மருத்துவமனையால் மறுபடி பிறந்திருக்கேன்”-இதயமாற்று அறுவைசிகிச்சை செய்தவர் நெகிழ்ச்சி

சென்னை அரசு ராஜீவ் காந்தி பொதுமருத்துவமனையில் 50 வயதான பொறியாளருக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டநிலையில், இதுகுறித்து சிகிச்சைப் பெற்றவர் கூறுகையில், “50 வயதில் ராஜீவ் காந்தி மருத்துவமனையின் குழந்தையாக இன்று மீண்டும் பிறந்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது பொறியாளரொருவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, Stent கருவி பொருத்தப்பட்டது. இருப்பினும் பலனின்றி உடல்நிலை பாதிக்கப்படவே, 2021-ல் தாயகம் திரும்பினார்.

இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் தீவிர இதயப் பாதிப்புடன், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் ஒரு நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த இதயவியல் துறை மருத்துவர்கள், 3 அடைப்புகள் இருப்பதையும், இதயம் பலவீனமாக இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து இதய மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு எனக் கூறியநிலையில், கடந்த ஜீலை மாதம் முதல் மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பிலேயே சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் அந்தப் பொறியாளர்.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 17-ம் தேதி சாலை விபத்தால் மூளைச்சாவு அடைந்த  30 வயது இளைஞரின் இதயத்தை, அடுத்த 2 மணி நேரங்களிலேயே இதயம் பாதிப்படைந்த பொறியாளருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுப் பொறுத்தியுள்ளனர். தொடர்ந்து 11 நாட்களில் தனியாக நடந்து செல்லும் அளவிற்கு அவருக்குப் பயிற்சியும் மருத்துவ சிகிச்சையும் தந்துள்ளனர். இதனால் நன்கு உடல்நலம் தேறிய பொறியாளர், இன்றுடன் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப உள்ளார்.

இதுகுறித்து சிகிச்சைப் பெற்ற பொறியாளர் பேசுகையில், “1972-ல் பிறந்த நான், இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மீண்டும் பிறந்திருக்கிறேன். எதிர்பார்க்காத இத்தனை உயர் சிகிச்சை காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் செய்து முடித்த மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என்று நெகிழ்ந்தார். குறிப்பாக தன் குடும்பம் 2014-ம் ஆண்டிலேயே உடலுறுப்பு தானத்திற்காக எழுதிக் கொடுத்துவிட்ட நிலையில், இன்று தனக்கு உறுப்பு தானம் கொடுத்த குடும்பத்திற்கு மனம் நிறைந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். 

இதுதொடர்பாக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் பேசுகையில், “தனியார் மருத்துவமனைகளில் 80 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை செலவாகும். இத்தகைய கடினமான இதய மாற்று அறுவை சிகிச்சை, அரசு மருத்துமனைகளில் எளியோருக்கும் இலவசமாக கிடைக்கிறது. இதனை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

இதுவரை 13 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் இம்மருத்துவமனையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மீண்டும் உறுப்பு மாற்று சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் வேகம் பெறுகின்றன. இதே மருத்துவமனையில் இன்று 6 இதய நோயாளிகள் மாற்று இதயத்திற்காக காத்திருக்கின்றன. உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்கும்பட்சத்தில் இந்தப் பொறியாளரைப் போல் அவர்களுக்கும் புதுவாழ்வு கிடைக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com