50 பவுன் தங்கம், 60 லட்சம் மொய்.. லாரி லாரியாக வந்த சீர்! இணையத்தை மிரட்டிய தாய்மாமன்!
மதுரை சூர்யா நகர் திருமண மண்டபத்தில் நடந்த சிறுமியின் காதணி விழாவில், தாய்மாமன் மற்றும் தாத்தா சார்பில் 50 பவுன் தங்கம், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், 500 வகை சீர்வரிசை, 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி, மேலும் ரூ.60 லட்சம் மொய் பணம் லாரி, கார் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், பிரமாண்டமான முறையில் தாய்மாமன் சீர் மற்றும் மொய் வழங்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
தென்மாவட்டங்களில் பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தாய்மாமன் சீர் வழங்கும் நடைமுறையில், சகோதரியின் குழந்தைகளின் காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சார்பில் சீர் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் உசிலம்பட்டி மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளில் தாய்மாமன் சீர் விமர்சையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதுரை சூர்யா நகரில் நடைபெற்ற காதணி விழாவில் சிறுமியின் தாய்மாமன் மற்றும் தாத்தா சார்பில் பிரமாண்டமான முறையில் சீர் வழங்கப்பட்டுள்ளது.
வியக்கவைக்கும் தாய்மாமன் சீர்..
சிறுமிக்கு மொய்யாக வழங்குவதற்காக ரூ.500 நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.60 லட்சம் பணம் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பணப்பெட்டிகளை தலையில் சுமந்தபடி உறவினர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று மொய் வழங்கியுள்ளனர்.
மேலும், 50 பவுன் தங்க நகைகள், வைர நெக்லஸ், வெள்ளிப் பொருட்கள், வெள்ளித் தட்டுகளில் பல்வேறு சீர்வரிசை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, சொகுசு கார், லாரிகளில் 500 வகையான சீர்வரிசை பொருட்கள், 50 கரும்புக் கட்டுகள், 500 மூட்டை அரிசி உள்ளிட்ட ஏராளமான பொருட்களும் சீர் வரிசையாக கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைக் கடை விளம்பரத்தைப் போன்று குடும்பத்தினர் தங்கம் மற்றும் வைர நகைகளை அணிந்து வந்து விழாவில் பங்கேற்ற காட்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த பிரமாண்டமான தாய்மாமன் சீர் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், “தாய்மாமன் சீர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் போல” என வியப்புடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

