நோயாளியை அனுமதிக்க 50 ரூபாய் லஞ்சம் - வீடியோ வெளியிட்டவருக்கு காவல்துறை மிரட்டல்
தென்காசி மருத்துவமனையில் 50 ரூபாய் லஞ்சம் பெற்ற புகாரில் இடமாற்றம் செய்யப்பட்டவர் குறித்து வீடியோ வெளியிட்டவர் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்துள்ளார்.
தென்காசியில் செயல்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்நிலையில் நேற்று அம்மருத்துவமனையில் தனது தந்தையை அனுமதிக்க விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணனிடம், அனுமதிசீட்டு கொடுக்கும் கணேசன் என்பவர் லட்சமாக 50 ரூபாய் கேட்டுள்ளார்.லஞ்சம் கொடுக்க மறுத்த கண்ணனிடம் 50 ரூபாய் கொடுத்தால்தான் அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்று கணேசன் கூறியதாகத் தெரிகிறது. இதனை வீடியோவாக எடுத்த மாரிக்கண்ணன் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது குறித்து தென்காசி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லினிடம் கேட்டபோது வீடியோவை பார்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை சிவகிரிக்கு பணிமாற்றம் செய்துள்ளதாகவும் கூறினார்.
வீடியோவை வெளியிட்ட மாரிக்கண்ணன் புதியதலைமுறையிடம் கூறும் போது “ நான் தென்காசி மருத்துவமனையில் எனது தந்தையை அனுமதிக்கச் சென்றேன். அப்போது அனுமதிச்சீட்டுக் கொடுக்கும் கணேசன் என்பவர் என்னிடம் லஞ்சமாக 50 ரூபாய் கொடுக்கும் படி கேட்டார். நான் முதலில் லஞ்சம் கொடுக்க முடியாது என்று கூறினேன். ஆனால் 50 ரூபாய் தந்தால்தான் அனுமதிசீட்டு வழங்கப்படும் என்று அவர் கூறினார். அதனால் அவரிடம் 50 ரூபாயைக் கொடுத்து விட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டேன். வீடியோ வெளியான சிறிது நேரத்தில் ஒரு காவல்துறை அதிகாரி ஒருவர் என்னை மிரட்டினார். அதனால் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.