கஜா புயல் எதிரொலி - 5 கிராம மக்கள் சாலை மறியல்
திருவாரூர் குன்னியூரில் கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறி 5 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அனைத்து இடங்களிலும் மின்வாரிய ஊழியர்கள் மற்றும் துப்பரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
கஜா புயலால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, வாழை, நெல், மற்றும் கரும்பு பயிர்கள் கஜா புயலில் சிக்கி சேதமடைந்துள்ளன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர்.
இதனிடையே தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தங்களுக்கு நிவாரணப்பொருட்கள் கிடைக்கவில்லை எனக்கூறி திருவாரூர் குன்னியூரில் 5 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் 50 சதவீதத்திற்கு மேல் இன்னும் மின்சாரம் வழங்கவில்லை, குடிநீர் வழங்கவில்லை என கூறி 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணப்பொருட்களை சமமாக வழங்க வேண்டும், தென்னை மரங்களுக்கான நிவாரண உதவியை உயர்த்த வேண்டும், விவசாயி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் வந்து உத்திரவாதம் தராமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து முடங்கியுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.