தென்காசி: காருக்குள் புகுந்த சாரைப்பாம்பு - 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது
சங்கரன்கோவிலில் காருக்குள் புகுந்த 5 அடி நீள சாரை பாம்பை மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடிபட்டது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவா. கட்டிட ஒப்பந்ததாரரான இவர், கட்டிட வேலை நடைபெறும் இடங்களுக்கு காரில் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கட்டிட வேலைக்கு தேவையான டைல்ஸ் வாங்குவதற்காக சங்கரன்கோவிலுக்கு வந்த அவர், டைல்ஸை வாங்கி காரின் பின் பக்கம் வைத்து விட்டு அவருடன் பணிபுரியும் ஒருவருடன் வாகனத்தை ஓட்டிச் சென்றார்.
அப்போது சங்கரன்கோவில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த போது அருகில் அமர்ந்திருந்தவரின் இருந்தவரின் கால் மேல் பாம்பு ஊர்ந்து சென்றது. அதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அலறினார். உடனே சிவா வாகனத்தை நிறுத்தி, காரின் முன்பக்கம் பார்த்தார். உள்ளே பாம்பு இருப்பது தெரிந்தது. பிறகு அவர் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் இருந்த பாம்பை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
உடனே மயக்கமூட்டும் மருந்தை டேஸ் போடுக்குள் அடித்தனர். ஆனால் எதற்கும் பாம்பு பணியவில்லை. இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் நேரு நகரைச் சேர்ந்த பரமேஸ்தாஸ் என்பவரை அழைத்து வந்தனர். அவர் புளியங்குடி சாலையில் உள்ள வாட்டர் சர்வீஸுக்கு காரை கொண்டு சென்று ஏர் பிரஷர் மூலம் பாம்பை வெளியேற்ற முயற்சித்தார். அப்போதும் பிடிக்க முடியவில்லை.
பின்னர் ஓட்டுனர் வட்டுக்கு கீழே பெரிய ஓட்டை போட்டு அதற்குள் கையை விட்டு 5 அடி நீள மஞ்சள் சாரைப்பாம்பை பரமேஷ்தாஸ் பிடித்தார். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பாம்பை பிடித்து தீயணைப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் சாரைப்பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.