கோயம்புத்தூர்| 103 சவரன் நகை கொள்ளை.. 48 வயது கொள்ளையன் பிடிபட்டது எப்படி? பகீர் பின்னணி!
கோவை குனியமுத்தூரில் 103 சவரன் நகை கொள்ளை வழக்கில், 48 வயது கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். கள்ளச்சாவி மூலம் திருட்டு செய்த அவர், பல்வேறு சிசிடிவி காட்சிகளின் மூலம் பிடிபட்டார். 1993 முதல் திருட்டு மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்ட இவரிடமிருந்து, தற்போது 80 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகர் குனியமுத்தூர், நரசிம்மபுரம் ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்த சூழலில் 2 தினங்களுக்கு பிறகு வீடு திரும்பிய ஜெபா மார்ட்டினுக்கு, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 103 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் திருடு போன அதிர்ச்சிகரமான சம்பவம் தெரியவந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். வீடு உடைக்கப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டதால், உறவினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் வழக்கு கோணத்தை சரியாக பிடித்துக்கொண்ட காவல்துறை, இது கள்ளச்சாவி போட்டு கொள்ளையடிக்கப்பட்டது என்பதை தெரிந்துகொண்டனர்.
மேலும் இதே போன்ற பாணியில் கடந்த ஆண்டு நடைபெற்ற 2 கொள்ளை வழக்குகள் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது.
பகீர் பின்னணி..
இதைத்தொடர்ந்து பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அவர் தற்பொழுது கோவையில் கண்ணப்ப நகர் பகுதியில் வசித்து வருகிறார். கார் டிரைவர் ஆக பணிபுரிந்து கொண்டே கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
1993 மும்பைக்குச் சென்று கொலை வழக்குகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதும் விசாரணையில் அம்பலம் ஆகியது. 2003 வருட கால கட்டங்களிலும் கோவையில் இவர் மீது திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. 2023இல் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலும் இதே போன்ற கள்ள சாவி போட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர் கையில் பல்வேறு சாவிகளை வைத்து கொத்தாக வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் ஒவ்வொரு சாவியாக போட்டு திறந்து பார்த்து திருட்டில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரம்பங்களைக் கொண்டும் சாவியை சரி செய்து வீடுகளை திறப்பார். சில நகைகளை அடமானத்திற்கு வைத்துள்ளார் சில நகைகளை வேறு இடத்தில் கொடுத்ததாக கூறி இருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தற்போது அவரிடமிருந்து 80 சவரன் நகைகள், கொள்ளைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

