ஓட்டை பிரித்து தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை
அரியலூரில் மனைவியை கண் சிகிச்சைக்கு கணவர் அழைத்துச்சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் இளங்கோவன். இவரது மனைவி மலர்விழிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உண்டானது. இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு இளங்கோவன் சென்னை புறப்பட்டுள்ளார். அப்போது பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையர்களுக்கு பயந்து மலர்விழி தகரப்பொட்டிக்குள் வைத்து பூட்டியுள்ளார்.
பின்னர் இருவரும் புறப்பட்டு சென்னை சென்றுள்ளனர். அவர்கள் பயந்ததுபோலவே ஆளில்லா நேரத்தில் ஓட்டைப்பிரித்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து வீடு திரும்பிய தம்பதியினர் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். இதுதொடர்பாக செந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.