தமிழகம், புதுச்சேரியில் நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைகாலம் தொடங்கியுள்ளது.
மீன்கள் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் தமிழக கடலோரப் பகுதிகளான ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 600 விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2016 வரை மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களாக கடைப்பிடித்து வந்த நிலையில், தற்போது 61 நாட்களாக மீன்பிடி தடைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித்தடை காலத்தில் தமிழக அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை உயர்த்தி பன்னிரெண்டாயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் எனவும், மீன்கள் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல மோட்டார் பொருத்திய நாட்டு படகுகளுக்கும் அரசு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.