தமிழகத்தில் 4000 பேர் காய்ச்சலால் பாதிப்பு - சுகாதாரத்துறை இணை இயக்குநர்
தமிழகத்தில் நேற்று வரை 4000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை மாநில இணை இயக்குநர் கிருஷ்ணராஜ், திண்டுக்கல் அடுத்துள்ள நந்தவனப்பட்டி கே.எம்.ஏ நகரில் டெங்குகாய்ச்சல் குறித்து வீடுகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கிருஷ்ணராஜ் பேசுகையில், “திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 310 பேர் காய்ச்சலால் பாதிக்கபட்டு உள்ளனர். டெங்கு புழுக்கள் தொழிற்சாலைகளில் தேங்கி இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தமிழகத்தில் கடந்த 20 நாட்களில் 39 லட்சம் ரூபாய் அபராதம் வசூல் செய்துள்ளேன். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் டெங்குவை குறைக்கவும் இறப்பை தடுக்கவும் எடுக்கப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் எங்கெல்லாம் போலி மருத்துவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளேன். தமிழகத்தில் நேற்று வரை 4000 பேர் காய்ச்சலால் பாதிக்கபட்டுள்ளதாக கண்டு பிடித்துள்ளோம். அந்த அளவிற்கு அரசு மருத்துவமனையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.