காவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. எனினும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கலில் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க, பரிசல் இயக்க 49வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 புள்ளி 22 அடியாக உள்ளதால் அணைக்கு வரும் 40 ஆயிரம் கனஅடி நீரும் காவிரி ஆற்றில் அப்படியே திறந்துவிடப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கண்டிபாளையம், ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் காவிரி ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.