திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 2 லட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகரில் வசித்து வருபவர் சுகுணா தேவி. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது கணவர் செல்வராஜ் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை கணவன், மனைவி இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். இதையடுத்து செல்வராஜனின் தந்தை வைரபிள்ளை செல்வராஜின் வீட்டிற்கு மாலை வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது மகன் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த செல்வராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.