தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
ஆம்பூர் அருகே தந்தையை பார்க்க சென்ற ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார். அங்கு எலக்ட்ரிஷன் வேலை செய்து வரும் கார்த்திக்கை பார்க்க அவரது ஒன்றரை வயது மகன் பூவை மித்திரன், செல்வம் வீட்டுக்கு சென்றுள்ளான்.
அப்போது அங்கு தோண்டப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளான். உடனடியாக அவரது தந்தை குழந்தையை மீட்டு வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தபோது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், வாணியம்பாடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி ஜோதி. இவரின் 4 வயது குழந்தை தர்ஷன் வீட்டினுள் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தான். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.