கடலூர்: ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழைநீர் - 4 கிராம மக்கள் அவதி
செய்தியாளர்: கே.ஆர்.ராஜா
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப் பாதையின் வழியாக காணாதகண்டன், நறுமணம், இருப்பு குறிச்சி உட்பட 5-க்கும் மேற்பட்ட 5 கிராமங்களுக்கு செல்ல முடியும். விவசாய விளை நிலங்களில் இருந்து விளை பொருள்களையும், இடுபொருள்களையும் எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய சாலையாகவும் இது உள்ளது.
இந்த சாலையில் தொடர்மழை காரணமாக 6 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில், ரயில் பாதையை கடந்தும், தண்ணீர் செல்லும் ஓடையின் குறுகிய பாலத்தில் குனிந்த படி புகுந்தும் செல்கின்றனர். சிலர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையிலும் இவ்வழிகளில் பயணிக்கின்றனர்.
இதனால் பல பேருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் சுற்றி செல்வதற்கு பயந்து ஆபத்தான முறையில் செல்ல வேண்டியுள்ளது என அம்மக்கள் தெரிவிக்கின்றனர். வெளியூரிலிருந்து வரும் பொதுமக்கள் இரவு நேரத்தில் சுரங்கப் பாதையில் ஆழம் தெரியாமல் இறங்கி பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு ரயில்வே துறையும், மாவட்ட நிர்வாகம் மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.