லஞ்சம் கேட்ட பறக்கும் படை அதிகாரிகள் பணியிடை நீக்கம்
சென்னை ஐசிஎஃப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆவடியைச் சேர்ந்த ஜெய்குகன் என்பவர் நேற்று முன்தினம் காரில் சென்னை ஐசிஎஃப் பகுதியில் சென்றிருக்கிறார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ஜெய்குகன் ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்றிருக்கின்றனர்.
தொடர்ந்து பணத்தை திருப்பித்தர லஞ்சம் கேட்டதாகவும், அதற்கு 2 ஆயிரம் ரூபாயை அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுச் சென்றதாகவும் ஜெய்குகன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் வாசுதேவன், காவலர்கள் கார்த்திகேயன், வீரமணி மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாபு ஆகிய 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.