மனிதவள அதிகாரிப்போல நடித்து 50 லட்சம் மோசடி - காஞ்சிபுரத்தில் 4 பேர் கைது

மனிதவள அதிகாரிப்போல நடித்து 50 லட்சம் மோசடி - காஞ்சிபுரத்தில் 4 பேர் கைது
மனிதவள அதிகாரிப்போல நடித்து 50 லட்சம் மோசடி - காஞ்சிபுரத்தில் 4 பேர் கைது

மனிதவள மேம்பாட்டு அதிகாரி எனக்கூறி நாடகமாடிய போலித்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில குறிப்பிட்ட நிறுவனங்களில் மனிதவள அதிகாரியாகப் பணிபுரிவதாகக் கூறி ஞானசேகர், சுல்தானா கான், விஜய், குமரன் ஆகிய 4 நபர்கள் காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் விஎம் கார்ட் என்ற மையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அதன் உரிமையாளர் தண்டபாணி என்பவரைச் சந்தித்து நாங்கள் இன்ஜினியரிங், டிப்ளமோ, ஐடிஐ படித்த மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நிரந்தர வேலை வாங்கித்தருகிறோம் எனக் கூறியதாக தெரிகிறது. மேலும் அதற்கான ஆவணங்களை இந்த நான்கு நபர்களும் காண்பித்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இந்த நான்கு பேரும் விஎம் கார்ட் சென்டரில் நேர்முகத் தேர்வு ஒன்றையும் நடத்தியுள்ளனர். இதில் வேலையில்லாத மாணவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர். இது மட்டுமன்றி இந்த நேர்முகத்தேர்வில் தேர்வான 59 மாணவ, மாணவிகளிடம் படிப்புக்கு தக்கவாறு குறிப்பிட்டத் தொகையை மூன்று தவணைகளாகப் பெற்றுள்ளனர். அதன் பின்னர் வேலைவாய்ப்புக் கடிதத்தை அளித்துள்ளனர். இதன்மூலம் சுமார் 50 லட்சம் வரை வசூலித்ததாகச் சொல்லப்படுகிறது.

வேலைவாய்ப்புக்கான கடிதத்தைப் பெற்றவர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனத்திற்குச் சென்று தங்களுக்கு வேலை வழங்குமாறு கேட்டுள்ளனர். ஆனால் அப்படி எந்த வேலையையும் தாங்கள் வழங்கவில்லை என்றும் இது போலியான கடிதம் என்றும் கூறி நிறுவன அதிகாரிகள் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனையடுத்து ஏமாற்றமடைந்த மாணவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சம்பத், விஜய், ஞானசேகர் மற்றும் கூட்டாளி குமரன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com