கனரக லாரி விபத்து
கனரக லாரி விபத்துPT

பொத்தேரி : அதிவேகமாக வந்த கனரக லாரி மோதி 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் பலி!

கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் அதிவேகமாக வந்த கனரக லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Published on

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரியொன்றும் மருத்துவமனையொன்றும் செயல்பட்டு வருகிறது. அதனால் இப்பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டத்துடனேயே இருக்கும். அப்படி இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பரபரப்பாகவே இருந்தது சாலை.

இந்த சாலையில் தற்போது தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை-திருச்சி தேசிய சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் சிக்னல் உள்ளிட்டவை முறையாக வேலை செய்யாமல் இருந்துள்ளன. சூழல் அறிந்து போக்குவரத்து காவலர்களும் அங்கு வேலையில் ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

கனரக லாரி விபத்து
கனரக லாரி விபத்து

இப்படியான இச்சாலையில் தாம்பரத்தை நோக்கி இன்று காலை எம்-ஸேன்ட் ஏற்றிக்கொண்டு அதிக பாரத்தோடு அதிவேகமாக கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த லாரி, சாலை நடுவே இருந்த சென்டர் மீடியங்களில் மோதி மரத்தையும், சிக்னல் மீடியங்களையும் உடைத்து கொண்டு சென்று சாலையை கடக்க முயன்ற மூன்று இருசக்கர வாகனங்களில் மோதியது. இதில் ஒரு பெண் உள்பட நான்கு பேர் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரண்டு கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

இந்த சம்பவம் காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து சென்று போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் பொத்தேரி பகுதியை சேர்ந்த பவானி (42), கல்லூரி மாணவர்கள் ஜஷ்வந்த், கார்த்திக் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனரக லாரி விபத்து
கனரக லாரி விபத்து

மேலும் இருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த கார்த்திக் SRM வள்ளியம்மை கலைக் கல்லூரியில் BSC முதலாம் ஆண்டும், ஜஸ்வந்த் எஸ்ஆர்எம் கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டும் படித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கும் இரங்கலை தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பார்த்தசாரதி என்பவருக்கு ரூ.50,000 வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com