கொடுக்காத பணத்தை கொள்ளையடித்து நாடகம்..! 6 பேரிடம் விசாரணை..!
கோவையில் கொடுக்காத பணத்தை கொள்ளையடித்த நாடகம் அரங்கேறியுள்ளது.
கோவையைச் சேர்ந்த தர்ஷன் தனது நண்பர் ராகுலுடன் சேர்ந்து விளம்பரப் படங்கள் மற்றும் குறும்படங்கள் எடுக்கும் தொழில் செய்து வருகிறார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார்.
சொத்து பத்திரத்தின் நகல் மற்றும் பிராசஸிங் கட்டணமாக இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கடன் தருவதாக பிரபாகரன் கூறியுள்ளார். அதை நம்பி சொத்து ஆவணங்களின் நகல் மற்றும் இரண்டரை லட்சம் ரூபாயை பிரபாகரனிடம் தர்ஷன் கொடுத்துள்ளார். ஆனால் பேசியபடி கடன் தராமல் பிரபாகரன் இழுத்தடித்துள்ளார். பணத்தை தரும்படி தொடர்ந்து தர்ஷன் வலியுறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திருப்பூருக்கு வந்து பணத்தை பெற்றுக்கொள்ளும்படி தர்ஷனிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.
அதன்படி அங்கு சென்ற தர்ஷன் மற்றும் ராகுலிடம் பூட்டு போடப்பட்ட பை ஒன்றை பிரபாகரன் கொடுத்துள்ளார். அதில் வெறும் காகிதங்கள் மட்டுமே இருந்துள்ளன. அதை மறைத்து பையில் 30 லட்சம் ரூபாய் இருப்பதாகக் கூறிய பிரபாகரன், எஞ்சிய 20 லட்சம் ரூபாய்க்கு காசோலைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை திறந்து பார்க்காமல் கோவை கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். அதை நம்பி தர்ஷன் மற்றும் ராகுல் பையுடன் கோவை சென்றுள்ளனர்.
அவர்களை பின்தொடர்ந்து சென்ற பிரபாகரனின் ஆள்கள் ராகுலை கத்தியால் குத்திவிட்டு பையை பறித்துச் சென்றனர். கொடுக்காத பணத்தை கொள்ளை அடித்து நாடகமாடிய பிரபாகரன் உள்பட 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்