தருமபுரி மாவட்டம் அருகே காட்டுவளவு எனும் கிராமத்தில் ரசாயனம் கலந்த மதுவை குடித்த 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காட்டுவளவு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த பழனிசாமி, பச்சையப்பன், விஜி, உத்தரக்குமார் ஆகிய 4 நண்பர்கள், மது அருந்துவதற்காக கடந்த புதன்கிழமை சென்றனர். அரசு மதுக்கடையில் மதுவாங்கிய அவர்கள், போதைக்காக ரசாயனப்பொருள் கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் 4 பேருக்கும், வாந்தி மற்றும் வயிற்று எரிச்சல் ஏற்பட்டது. இதனால், பழனிசாமி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், வயிற்று எரிச்சல் அதிகமானதால், உத்தரகுமார், விஜி, பச்சையப்பன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிசை பலனின்றி உயிரிழந்தனர். இதனிடையே, பென்னாகரம் பகுதியில், திருட்டுத்தனமாக, எரிசாராயம் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

