தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்தியாளர்: ந.காதர்உசேன்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அமைந்துள்ள பூண்டி மாதா கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று இரவு தேர் பவனி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண சென்னை எழும்பூர் நேருபார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் சார்லஸ் என்பவரின் மகன்கள் பிராங்க்ளின் (23), ஆண்டோ (20) மற்றும் அவரது நண்பர்கள் கிஷோர் (20), கலையரசன் (20) மனோகரன் (19) ஆகிய 5 பேரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று இவர்கள் கோவில் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துள்ளனர். அப்பொழுது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் 5 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கினர். இதைப் பார்த்த அங்கு குளித்த மற்ற நபர்கள் வேக வேகமாக கரைக்கு வந்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்து 5 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், கலையரசன், கிஷோர் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மனோகரன் மற்றும் ஒருவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. 5 வது இளைஞரின் உடலை தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.