சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியின் மூன்றாம் கட்ட ஆய்வுப் பணிகள் பூமி பூஜையுடன் இன்று காலை தொடங்கியுள்ளது.
மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராம் தலைமையில் 3 தொல்லியலாளர்களும், குழி தோண்டும் பணிக்கு 20 பேரும் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக முதற்கட்டமாக, 10 சென்ட் பரப்பளவில் 9 குழிகள் தோண்டப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற முதற்கட்ட ஆய்வின்போது ஆயிரத்து 800 பொருட்களும், 2016-ல் இரண்டாம் கட்ட ஆய்வின்போது 3 ஆயிரத்து 550 பொருட்களும் கிடைத்தன. அதில், பழங்கால தமிழர்களின் பெயர்கள், வர்ண்ம் தீட்டப்பட்ட தட்டு, மண்குவளை, சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைக் கட்டைகள் கிடைத்துள்ளன.
மேலும், விலங்குகளின் கொம்புகளால் ஆன ஈட்டி, யானை தந்தத்தினாலான சீப்பு, தாயக்கட்டை, காதணிகள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன. இவை 3-ம் நூற்றாண்டிலேயே மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களுக்கு இணையான நகர மக்கள் வாழ்ந்ததற்கான சான்று என்று தொல்லியலாளர்கள் தெரிவித்தனர். இந்த அகழ்வாராய்ச்சியானது நான்கரை ஏக்கர் பரப்ப்பளவில் சுமார் 10 ஆண்டுகளுக்கு நடைபெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.