பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி

பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி
பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியே அதிக வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

நாம் தமிழர் கட்சி 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டிலிருந்துதான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. அதற்கு முந்தைய 2011 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடம் வந்தது.

2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது. 2019-ஆம் ஆண்டு 22 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகளை பெற்றது. அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 3.9% வாக்குகளை பெற்றது. இதனிடையே 2019 உள்ளாட்சி தேர்தலில் ராஜாக்காமங்கலம் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தற்போது 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. இதில் சரிபாதி ஆண், பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பில் பிரதான கட்சிகளுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி உள்ளது என கூறப்பட்டது. தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சீமானுக்கு 4.93% பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். மண்டலவாரியாக பார்க்கும்போது தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி 7.61% பெற்று 3வது இடத்தில் இருந்தது. மேற்கு தொகுதியில் 3.44% பெற்று 4வது இடத்தில் இருந்தது. மத்திய தொகுதியில் 5.29 சதவீதமும் வடக்கு தொகுதியில் 2.39 சதவீதமும் பெற்று 3வது இடத்தில் இருந்தது. சென்னையில் 4.46 % பெற்று 4வது இடத்தில் இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com