ரமலான் சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்து : 34 பேர் படுகாயம்!
சின்னமனூர் அருகே ரமலான் பண்டிகைக்காக சுற்றுலா சென்று திரும்பிய போது பள்ளத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 34 பேர் படுகாயமடைந்தனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் கலிமேட்டுப்பட்டியை பகுதியை சேர்ந்த 34 பேர், சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். விடுமுறை முடிந்து ஊர் திரும்பிய போது, 4வது வளைவில் திடீரென எதிர்பாராத விதமாக வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் சென்ற 34 பேரும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, உடனடியாக சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
படுகாயம் அடைந்தவர்களில் 27 பேர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், எதனால் விபத்து ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர். ரமலான் பண்டிகையை முடித்து மறுநாளே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்று திரும்பிய போது விபத்தில் சிக்கியது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 12 ஆண்கள், 16 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.