தஞ்சையில் 34 பேருக்கு டெங்கு: கொசு உற்பத்தியாக காரணமானவர்களுக்கு அபராதம்
தஞ்சை மாவட்டத்தில் டெங்குவால் 34 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் காரணமாக 4 பேர் உயிரிழந்ததை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நூலகம், சந்தை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட மைய நூகலத்திற்குச் சென்ற ஆட்சியர், அங்கு தொட்டிகள் தூய்மையாக இல்லாததால், நூலக அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதோடு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
இதுகுறித்து பேசிய ஆட்சியர், கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சுகாதாரமற்ற நிலையில் இருந்த ஹோட்டல்கள், கடைகள் மற்றும் வீடுகளின் உரிமையாளருக்கு இதுவரை 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்தார்.