வாணியம்பாடி: கட்சியில் இருந்து திடீரென விலகும் நாம் தமிழர் நகர நிர்வாகிகள்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
வாணியம்பாடி நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற நகர செயலாளர் ராஜ்குமார், நகரத் தலைவர் பரத் தலைமையில் 30க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சங்கர் கணேஷ் என்பவர் பேசுகையில், “நான் வாணியம்பாடியில் வார்டு உறுப்பினராக உள்ளேன். கடந்த 7 வருடங்களாக கட்சிக்காக உழைத்து இருக்கிறேன். சென்னையில் கடந்த தேர்தலுக்காக நான் ஆட்டோவில் பரப்புரை செய்தேன். ஆனால் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியினரிடையே நிறைய குளறுபடிகள் இருந்தது. இது குறித்து மாவட்ட செயலளாரிடம் கூறினோம். அவர் தலைமையிடத்தில் இது குறித்து பேசுவதறாக போன் செய்தார். ஆனால் தலைமை, மாவட்ட செயலரின் போனை எடுக்கவில்லை.
இவருக்கே இந்த நிலைமை என்றால் தொண்டர்களாகிய எங்களின் நிலைமை வேறு.. நாங்கள் பிரபாகரனுக்காக இக்கட்சிக்கு சென்றோம். ஆனால் இங்கு நடப்பது வேறு... வாணியம்பாடி நகரம் மற்றும் 15 பூத்திலிருந்த அனைவரும் கட்சியில் இருந்து விலகுகிறோம், 5 பூத்களில் 2020 சட்டமன்ற தேர்தலில் 132 ஓட்டுகள்தான் பெற்றனர். ஆனால் நாங்கள் வேலை செய்து தற்போது 382 ஓட்டுகள் வாங்கி தந்தோம். ஆனால் தலைமை எங்களுக்கு பதில் அளிக்கவில்லை, ஆகவே நாங்கள் தற்போது கட்சியில் இருந்து விலகுகிறோம்” என்று கூறினார்.
கடந்த மாதம் 07.11.2024 ஆம் தேதி திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உட்பட 10-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.