”5 வருடங்களில் இவ்வளவு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவா!” - தமிழக அரசு சொன்ன தகவல்!

”5 வருடங்களில் இவ்வளவு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவா!” - தமிழக அரசு சொன்ன தகவல்!
”5 வருடங்களில் இவ்வளவு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவா!” - தமிழக அரசு சொன்ன தகவல்!

தமிழகத்தில் 2016 பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை 30ஆயிரம் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசுதரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தகவல்தேனி வீரபாண்டியை சேர்ந்த சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், "தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் அரசின் முறையான அங்கீகாரம் பெறாமல் சட்டவிரோதமாக பத்திர பதிவு செய்து வருகின்றனர். உரிய அங்கீகாரம் பெறாத மனை பிரிவுகளை மோசடியாக மக்களிடம் விற்பனை செய்வது மட்டுமல்லாமல், அரசுக்கு மிகப்பெரிய இழப்பிடையும் ஏற்படுத்தி வருகின்றனர். உள்ளாட்சி துறைகளில் அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது.

ஆனால், சட்ட விதிகளை முறையாக பின்பற்றாமல் தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர், முறைகேடாக பத்திரப்பதிவு செய்துள்ளார். எனவே, முறைகேடாக பத்திரப்பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்ட பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் முறைகேடாக பத்திர பதிவு செய்த சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு சட்டம் 22A அமல்படுத்திய பின்பு அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்திருந்தால், அதன் விவரங்களை புள்ளி விவரத்துடன் பத்திர பதிவுத்துறை தலைவர் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பத்திர பதிவு சட்டம் 22A அமல்படுத்தியதில் இருந்து தற்போது வரை 30ஆயிரம் அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com