கடத்தப்பட்ட 3 வயது குழந்தை மீட்பு - மூதாட்டியிடம் தீவிர விசாரணை
பல்லாவரத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை காவல்துறையினர் தாம்பரத்தில் மீட்டனர்.
சென்னை குரோம்பேட்டையில் வசித்து வரும் தம்பதியினர் ஆண்டனி சார்லஸ்-மீரா. இந்தத் தம்பதியினர் தங்கள் குழந்தை பெர்லின் பிரின்சியுடன் பல்லாவரத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்திற்கு நேற்று சென்றுள்ளனர். தேவாலயத்தில் இருவரும் வழிபட்டுக் கொண்டிருந்தபோது தேவாலயத்திற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை காணாமல் போனது. இதனால் பதட்டமடைந்த பெற்றோர் குழந்தை காணாமல் போனது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் தேவாலயத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிந்த காட்சிகளை பார்த்தபோது, பெண் ஒருவர் தனது புடவையில் மறைத்து குழந்தையை தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்தக் காட்சியைக் கொண்டு காவல்துறையினர் கடத்தப்பட்ட குழந்தையை தேடி வந்தனர். இந்நிலையில் தாம்பரம் சேலையூர் அருகே கடத்தப்பட்ட குழந்தையை மூதாட்டி ஒருவரிடம் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் அந்த மூதாட்டியுடன் குழந்தையை கடத்தியது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், தேவலாயத்திற்கு வந்த மூதாட்டி குழந்தை விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்து மடியில் வைத்து கொண்டிருந்ததாகவும், குழந்தையை கேட்டு யாரும் வரவில்லை என்பதால் குழந்தையை தன்னுடன் அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பரங்கிமலை துணை ஆணையர் முத்துச்சாமி புதியதலைமுறைக்கு தெரிவித்துள்ளார்.