பள்ளி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது குழந்தை.... பரிதாபமாக உயிரிழந்த சோகம்!
மதுரை கே.கே.நகர் பகுதியில் இயங்கிவருகிறது தனியார் மழலையர் பள்ளி ஒன்று. இந்த பள்ளியில் பயின்று வந்த ஆருத்ரா என்ற 3 வயது குழந்தை தனது சக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அச்சமயம் பார்த்து திறந்து கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை தவறி விழுந்துள்ளது. அரை மணி நேரம் தண்ணீரில் தத்தளித்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு ஒரு மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் கதறி அழுதனர். தனியார் மழலையர் பள்ளியின் அஜாக்கிரதையே இதற்கு காரணம் என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, மழலையர் பள்ளி ஆசிரியர்களிடம் மதுரை மாநகர துணை கமிஷனர் அனிதா விசாரணை நடத்தினார். இதில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த சம்பவத்துக்கு காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளி உரிமையாளர் திவ்யா பத்ரிலட்சுமி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.