3 வயது சிறுவனை கைகளை கட்டிப்போட்டு தாக்குதல்.. பள்ளியில் அரங்கேறிய கொடூரம்!
திருத்துறைப்பூண்டி கச்சேரி ரோடு பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (33). இவரது 3 வயது மகன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் pre-KG படித்து வருகிறார். இந்நிலையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவனின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் ஆசிரியர் பாக்கியலட்சுமி மற்றும் பெண் உதவியாளர் செல்வி தாக்கியதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பள்ளிக்குச் சென்று விசாரித்த சிறுவனின் தந்தை கோபிநாத், வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்வையிட்டுள்ளார். அப்போது சிறுவனின்இரு கைகளையும் கயிற்றால் கட்டப்பட்டு தாக்கப்படும் காட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அதனை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை பாக்கியலட்சுமி மற்றும் பெண் உதவியாளர் செல்வி ஆகிய இருவர் மீதும் மூன்று பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, உதவியாளர் செல்வியை காவல்துறையினர் கைதுசெய்திருக்கும் நிலையில், ஆசிரியை பாக்கியலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

