குளத்தில் மூழ்கிய சிறுமி - காப்பாற்ற முயன்ற தாய், உறவினர் உட்பட மூவரும் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி தாய், மகள் உட்பட 3 பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனையூர் பெரியகுளத்தில் தாய் இந்திரா, மகள் சுமித்ரா, மற்றும் உறவுக்கார பெண் செல்வி ஆகியோர் குளத்தில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது கரையில் இருந்த சிறுமி குளத்திற்குள் தவறி விழுந்தார். மகள் குளத்தில் மூழ்குவதை கண்ட தாய் இந்திரா காப்பாற்ற முயன்றுள்ளார். சிறுமியை மீட்கும் முயற்சியில் உறவினர் செல்வியும் ஈடுபட்டுள்ளார். அப்போது, தாய் இந்திரா மற்றும் உறவினர் செல்வி ஆகியோர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். மகள் சுமித்ராவும் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.